என் இனிய இஸ்லாம்

எதுவுமாக இல்லாதிருந்த மனிதனை, எல்லா வல்லமையும் ஆற்றலும் தன்னகத்தே கொண்டுள்ள இறைவன், தட்டினால் ஓசை வரக்கூடிய சுட்ட மண்ணிலிருந்து படைத்தான். இன்னும் உயிரற்றிருந்த மனிதனுக்கு தனது பரிசுத்த ஆன்மாவிலிருந்தே ரூஹை ஊதினான். பார்வை, செவிப்புலன், சுவாசம், பேச்சு, சிந்தனை போன்ற மகத்தான ஆற்றல்களை வழங்கிச்

சிறப்பித்தான், தனது பிரதிநிதியாகவும் தேர்ந்தெடுத்தான். படைப்புகள் அனைத்தையும் மனிதனுக்காக படைத்த அவன், மனிதனை அவனை அறிந்து, அவனுக்கு அடிபணிந்து, நன்றியுள்ள அடியானாக வாழ்வதற்கே படைத்தான்.

உணவளிப்பது, உடையளிப்பது, தூக்கமும் விழிப்பும் தருவது, நோயைத் தருவது பின் குணப்படுத்துவது, வறுமையும் பின் செல்வமும் தருவது என்று மனிதனின் வாழ்வை பிறப்பிலிருந்து இறப்புவரை அவனே இயக்குகிறான். இதை உணராத மனிதன் இந்நானிலம் மீதினில் கர்வத்துடன் நடைபோட்டுக் கொண்டிருக்கின்றான். படைத்தவனை மறந்து, தனது நாட்டங்களும் தேட்டங்களும் தனது சொந்த ஆற்றலினாலும் அறிவின் காரணத்தினாலுமே நிறைவேறுவதாக எண்ணுகிறான், தனது முயற்சிகளும் அவன் நாடினாலேயன்றி எந்தவொரு பலனையும் அளிக்காது என்பதை அறியாமலும்; தான் இல்லாமலிருந்தவன் அவனே என்றும் உள்ளவன் என்பதை உணராமலும், தனது திறமையின் மீதும் சிற்றறிவின் மீதும் முழுநம்பிக்கையை பரஞ்சாட்டி தன்னை அறியாமலே தற்பெருமை கொண்டு அவனுக்கு நன்றி செலுத்த மறந்து விடுகிறான் !

ஒவ்வொரு கணப்பொழுதும் அவனே இவ்வண்ட சராசரத்தையும், அதில் வாழுகின்ற பன்னூற்றுக் கோடிகணக்கான உயிர்களையும் படைத்து, வளர்த்து, அதன் சீர்கெட்டு விடாமல் பரிபக்குவப்படுத்தி இயக்குகிறான். படைப்புகளை விட்டும் தேவையற்றவனாக இருக்கின்றான், ஆயினும் அவனின்றி எந்தவொரு படைப்பாலும் சுயஆற்றலைப் பெற்று இயங்கிட முடியாது.

நன்மைகளையும் தீமைகளையும் அவன் மாறி மாறித் தருவதில், நமது சிற்றறிவிற்கும் அப்பாற்பட்ட காரணங்கள் பொதிந்திருக்கும், நாமோ பொறுமை கொள்ளாது உணர்ச்சி வசத்தால் உயர்விலும் தாழ்விலும் அமைதி காக்கத் தவறி விடுகிறோம். படைத்தவனின் காரண காரியங்களை, படைப்புகள் ஒருபோதும் அறிந்திட முடியாது; ஆயினும்

அவற்றை அவனின் நாட்டப்படி விட்டுவிடுவதே அடிமைத்தனத்திற்கு அழகாகும். இதைவிடுத்து நடக்கும் நிகழ்வுகளை குறித்து வருந்திக் கொண்டும், அவனிடம் வாதிட்டுக் கொண்டும் இருந்தால் அவனது சீற்றத்தையே சந்திக்க நேரிடும், இறைவன் விதித்த விதியை நாம் பொருந்திக் கொள்ளாதவரை, அவன் எந்த ஒரு சோதனையையும் வேதனையையும் நீக்கப் போவதில்லை.

கருவில் விதைக்கப்பட்ட நொடி முதல், மண்ணறை சென்றடையும் நொடிவரை ஒருவனின் வாழ்வில் ஏற்படும் ஏற்றம் தாழ்வு என அனைத்து நிகழ்வுகளும் அல்லாஹ்வின் நாட்டப்படியே

நிகழ்கின்றது, சிறு அணுவின் அசைவிலும் ஆழ்கடல் அலையின் அசைவிலும் அவனது ஆற்றலே மறைந்திருக்கின்றது, இப்படிச் சர்வ நிகழ்வுகளும் அவனது நாட்டப்படி நடப்பதை நாம் பொருந்திக் கொள்ள வேண்டும், மாறாக நமது மடத்தனமான அறிவையும் பலமற்ற ஆற்றலையும் நம்பி, உயர்வின் போது பெருமையுடன் தற்புகழ் பாடுவதும், தாழ்வின் போது ஏமாற்றத்துடன் சோர்வடைந்து விடுவதும் பெரும் மடமையாகும். எந்த நிலை வந்தாலும், எதுவும் அவனை மீறி வந்திடாது என்று உறுதியாக நம்பிக்கை கொண்டு, எல்லாம் ஏகனின் சித்தம் என்று விதியைப் பொருந்திக் கொண்டு, அமைதியுடன் அவனுக்கு அடிபணிந்து வாழ்வதே அறிவுடையோருக்கு அழகாகும்.

“அல்லாஹ் நாடியதே நடக்கும்; அனைத்து சக்தியும் அல்லாஹ்வுக்கேயன்றி வேறில்லை”. – அல்குர்ஆன் [18:39]

image

image

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s