என் இனிய இஸ்லாம்

பாலியல் கொடுமை செய்யக் கூடியவர்கள் யார்? – அனைத்து பெற்றோரும் கட்டாயம் அறிந்திருக்க வேண்டியவை
உலகளாவிய ரீதியில் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல், குழந்தை கர்ப்பம்…. என வேகமாக நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றது.
இதிலிருந்து எவ்வாறு உங்கள் குழந்தைகளை பாதுகாப்பது என்பது அனைத்துப் பெற்றோர்களுக்கும் ஆழமாக தெரிந்திருக்க வேண்டிய ஒரு அத்தியாவசியம்.
பாலியல் கொடுமை செய்யக் கூடியவர்கள் யார்?
பாலியல் குற்றவாளிகள் என்பவர்கள் குடிகாரர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், உளவியல் சிக்கலுக்குள்ளானவர்கள் என்றெல்லாம் சில தவறான கருத்து இருக்கிறது.
உண்மையில் அவர்கள் உங்களில் ஒருவராகவும் இருக்கலாம். வெளிநபராகவும் இருக்கலாம், யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். இவர்கள்தான் என்று வகைப்படுத்த முடியாது.
படித்தவர்கள், பெரிய பதவியில இருப்பவர்கள், கெளரவமான குடும்பத்தில் இருப்பவர்கள், சின்ன பசங்க, பெரிய பசங்க, வயதானவங்க போன்ற அடையாளங்களால் நாம் நம்பிக்கை கொள்வது தவறாக முடிந்துவிடக்கூடும்.
பாலியல் கொடுமைக்குள்ளான குழந்தைகள் பற்றிய ஒரு ஆய்வில், 60% சதவிகித குற்றவாளிகள் குழந்தைகளுக்கு நன்கு அறிமுகமானவரே என்ற அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது.
குழந்தைகளை நெருங்கும் ஆபத்துகள் என்ன…
தன்னுடைய அந்தரங்க உறுப்புகளை குழந்தையிடம் காட்டுவது அல்லது குழந்தைகளின் உறுப்புகளை காட்ட சொல்வது, அந்தரங்க உறுப்புகளை தொடுவது மற்றும் தொடச் செய்வது, குழந்தைகள் ஆடையில்லாமல் இருக்கும்போது மறைந்திருந்து பார்ப்பது, வீடியோ மற்றும் புகைப்படம் எடுப்பது, ஆபாச படங்களை காண்பிப்பது மற்றும் அது பற்றிய விளக்கங்களை தருவது, சீக்ரெட் கேம் (ரகசிய கேம்) விளையாடலாம் என அழைப்பது, பரிசுப் பொருட்களை வாங்கி கொடுத்து அதீத அன்புடன் இருப்பது போல நடிப்பது, குழந்தையின் பெற்றோரிடம், ‘நீங்கள் செல்லுங்கள்.. நான் குழந்தையை பார்த்துக் கொள்கிறேன்’ என அதீத உரிமையை எடுத்துக் கொள்வது, மற்ற குழந்தைகள் போல விளையாட விடாமல் தனிமைபடுத்துவது, இருவருக்குமான விஷயங்களை நெருக்கமானவரிடம் சொல்ல அனுமதிக்காமல் சூழ்ச்சி செய்வது, குழந்தைகளை குற்றவாளிகள் என பட்டம் கட்டி பெற்றோரிடம், ‘நான் உங்கள் குழந்தையை திருத்துகிறேன்…’ என்று நடிப்பது, அறைக்குள் அத்துமீறி நுழைவது போன்ற செயல்கள் ஒரு மனிதரிடம் தென்பட்டால், அவர் குற்றவாளி என அடையாளம் காணுங்கள்.
குழந்தையின் நடத்தையில் மாற்றம்
குழந்தைகள் தன் இயல்பு நிலையிலிருந்து மாறி, விரல் சூப்புதல், படுக்கையில் சிறுநீர் கழித்தல், தனிமையில் இருத்தல், பாலியலில் விருப்பம் காண்பித்தல், படிக்க மற்றும் விளையாட முடியாமல் தவித்தல், புதிய நபர்களுடன் சேர்தல், கவனமின்மை, வன்ம குணத்துடன் காணப்படுதல் என குழந்தைகளின் போக்கில் மாற்றமிருந்தால் அவர்களை கண்காணித்து, அக்கறையுடன் அவர்களுக்கு என்ன பிரச்சினை என்று கேளுங்கள்.
சொல்ல தயங்கினாலும் அவர்களிடம் நம்பகத் தன்மையுடன் பேசி, உண்மையை கேட்டறியுங்கள். சில சமயங்களில் குழந்தைகள் எதையும் வெளிப்படையாக சொல்ல தயங்கலாம்.
குழந்தைகள் தயங்குவதற்கான காரணங்கள்
நமக்கு நடந்த அனுபவத்தை பற்றி சொன்னால் பெற்றோர் தன்னை நம்ப மாட்டார்கள், அடிப்பார்கள், திட்டுவார்கள் என்ற பய உணர்வு.
பெற்றோரின் அன்பை இழந்துவிடுவோம் என்ற அச்ச உணர்வு, தங்களை வெறுத்து ஒதுக்கி விடுவார்களோ என்ற பயம்.
கொடுமை இழைத்தவர் மிகவும் தெரிந்தவராக இருப்பின், அவரின் அன்பை இழந்து விடுவோமோ என்ற குழப்பம்.
அவமானம், குற்ற உணர்ச்சி, தான் தவறு செய்து விட்டோம் என்ற மனோபாவம், நம் மீதுதான் தவறு என்று குற்றம் சாட்டப்படுவோம் என்ற எண்ணம்.
குற்றம் புரிபவர் மிரட்டுவதால் தனக்கோ, தன் பெற்றோருக்கோ ஆபத்து நேரிடும் என்ற பயத்தால், அவர்கள் தங்களுக்கு நடந்ததை சொல்ல தயங்குகின்றனர்.
கொடுமைக்கு தாங்களே பொறுப்பு என கொடுமைகளோடு போராட பழகிக் கொள்கின்றனர்.
பாலியல் கொடுமைகளை தவிர்க்கும் வழிகள் என்ன
குழந்தைகளிடம் நேரத்தை செலவழியுங்கள். உங்களின் பாதுகாப்பு வட்டத்துக்குள்ளேயே குழந்தைகளை பார்த்துக் கொள்ளுங்கள். எவரையும் நம்பி குழந்தைகளை ஒப்படைக்காதீர்கள். குழந்தையிடம் பாலியல் கல்வி பற்றி கற்றுக் கொடுங்கள். டிவி, பேப்பரில் நடந்ததை எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.
தெரிந்தவரோ, அறிமுகமில்லாத நபரோ, யாராகினும் உள்ளாடைகளின் மூலம் மறைக்கப்படும் உடல் உறுப்புகளை தொட்டாலோ, தொட முயற்சித்தாலோ அவரை விட்டு ஓடி வந்துவிடவேண்டும் என கற்றுக்கொடுங்கள்.
பாதுகாப்பான தொடுகை
தொடுதல் விதியை கற்றுக்கொடுங்கள். safe touch அதாவது, உன்னை சுத்தமாக, ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பெற்றோர் மற்றும் மருத்துவர் தொடலாம்.
unsafe touch, இதை தவிர வேறு காரணங்களுக்கு தொடுவது சரியல்ல என்று புரிய வையுங்கள்.
அசௌகரியமாக உணர்ந்தால் அங்கிருந்து உடனே வெளியேறுவது நல்லது என்றும், உடனே பெரியவர்களிடம் இதை பற்றி அவசியம் சொல்ல வேண்டும் என்றும் சொல்லுங்கள். வேண்டாம், முடியாது என்று கத்திக் கொண்டு அங்கிருந்தோ, அந்த நபரிடம் இருந்தோ வெளியேற வேண்டும் என சொல்லித் தாருங்கள். பொதுவாக பாலியல் கொடுமைகள் மறைவான இடத்தில் நடப்பதால், அங்கிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள ஓடி வந்துவிட வேண்டும் என சொல்லி தரலாம்.
குழந்தை- பெற்றோர் உறவு
குழந்தைகளை நம்புங்கள்:
உங்கள் குழந்தையை நீங்கள்தான் நம்ப வேண்டும். அவர்கள் எவ்வளவு பெரிதாக சித்தரித்து சொன்னாலும் அவர்களின் பேச்சை கவனமாக கேளுங்கள். குழந்தை பாலியல் தொந்தரவுக்கு ஆளாகி உள்ளது என்று தெரிந்தால், ”இது உன் தவறல்ல” என்று சொல்லி நீ சொல்வதை நம்புகிறேன் என தீர விசாரியுங்கள்.
பொறுமையை கடைபிடியுங்கள்:
அவர்களின் அனுபவத்தை சொல்லும் போது அழுது, கத்தி ஆர்ப்பாட்டம் செய்யாதீர்கள். அமைதியாய் கேளுங்கள். இது உனக்கு மட்டும் நடந்தது அல்ல, மற்ற குழந்தைகளுக்கும் இப்படி நடந்து இருக்க கூடும் என புரிய வையுங்கள். பின்னர், குற்றவாளியை கண்டறிந்து குழந்தையை பாதுகாப்பதில் முழு மூச்சாய் இறங்குங்கள். குழந்தையின் உணர்வுகளை புரிந்துகொண்டு அவர்களுக்கு ஆறுதலாய் இருங்கள்.
பாதுகாப்பு கொடுங்கள்:
குழந்தையிடம் அதிக கவனத்தை செலுத்துங்கள். குழந்தைக்கு எப்போதும் ஆதரவாய் இருங்கள். பெற்றோரின் ஆதரவே குழந்தைகளின் எதிர்காலம். பாதுகாப்பாக உணர்வதற்கான செயல்களை செய்யுங்கள். நான் இருக்கிறேன் என்ற பாதுகாப்பு கவசமாய் மாறுங்கள்.
பாதிக்கப்பட்டோரை பழிக்காதீர்கள்:
ஏற்கனவே உடலளவிலும், மனதளவிலும் பாதிக்கப்பட்ட குழந்தையை மேலும் மேலும் காயப்படுத்த வேண்டாம். நீ ஏன் அங்கு போனாய், உன்னை யார் அவரிடம் விளையாட சொன்னது போன்ற வார்த்தைகள் குழந்தையை பலவீனமாக்கும். தன் நிலையை புரிந்து கொள்ள எவருமில்லை என தனிமையை தேடும். தற்கொலை எண்ணம் தலைதூக்கும். வேறு விபரீதங்கள் கூட நடக்கலாம்.
குழந்தை வளர்ப்பில் கவனம்:
பெண் குழந்தைகளுக்கு மட்டுமே அறிவுரைகள், விதிமுறைகள், கட்டுப்பாடுகள் என அமுல்படுத்த வேண்டாம். ஆண் குழந்தையின் மேலும் கவனத்தை திருப்புங்கள். ஆண் பெண் சம உரிமை, இருவருமே உலகில் வாழ தகுதியானவர், இருவருக்குமே சம உரிமையுண்டு, இருவரின் ஆற்றலும் திறமையும் சமம்தான்; உருவங்கள் மட்டுமே வேறுபாடு, மனம்-உணர்வு-வலி-விருப்பம் ஆகியவை இருவருக்குமான பண்புகள் என சமத்துவம் காண்பியுங்கள்.
ஆண்-பெண் குழந்தைகள் உறவு:
இருவரையும் ஒன்றாகவே விளையாட விடலாம், தவறில்லை. குறிப்பிட்ட வயதில் வரும் மாற்றங்கள் இயற்கையானவை, இயல்பானவை என்று சொல்லுங்கள். சிறுநீர், வியர்வை மற்றும் மலம் எப்படி கழிவோ அதுபோல பாலுணர்வும் (sex) ஒரு மனிதக் கழிவுதான். இதை வெளியேற்றுவதற்கான வயது 18, பாலுணர்வு இருவரின் விருப்பத்தோடு நடைபெற வேண்டும். அது சூழ்நிலையாலோ, தனிநபரின் விருப்பத்தாலோ, கட்டாயப்படுத்தியோ, வன்முறை உணர்வோடோ இருக்க கூடாது என தெளிவாக புரிய வையுங்கள்.
சினிமா-நாடகம்-கதைகள் போன்றவற்றில் வரும் தவறான கருத்துகள் (myth):
ஒருவரை பலாத்காரம் செய்தால் அவர் தற்கொலை செய்து கொள்வது, ஒருவருடன் உடலுறவு மேற்கொண்டால் அவரைதான் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனை, இனி நமக்கு திருமணம் நடக்காது, பெற்றோர் சமூகம் ஒதுக்கி வைத்துவிடும் என்ற தவறான புரிதல் இவற்றையெல்லாம் களையுங்கள். உண்மையை எடுத்துச் சொல்லுங்கள். யதார்த்தத்தை விளக்குங்கள்.
பாகுபாடு
குழந்தைகளுக்கு நோ சொல்ல கற்றுக் கொடுங்கள்:
பெரியவராக இருந்தாலும் சரி, அப்பா, அம்மா, தாத்தா யார் வேண்டுமானாலும் தவறு செய்தால் தவறை எதிர்த்து கண்டிக்கும் பழக்கத்தை கற்றுக் கொடுங்கள்.
உணவில், விளையாட்டிலும் பாகுபாடு வேண்டாம். ஆண் குழந்தைக்கு அதிக உணவு, பெண் குழந்தைக்கு குறைந்த உணவு. ஆண் குழந்தை சாப்பிட்ட பின் பெண் குழந்தை சாப்பிட வேண்டும். ஆண் பிள்ளைக்கு கார், பேட், பால். ஆனால் பெண் குழந்தைக்கு பொம்மை, சொப்பு சாமான். பெண் பிள்ளையெனில் பாட்டு க்ளாஸ், ஆண் பிள்ளையெனில் டென்னிஸ் க்ளாஸ் என்ற பாகுபாடுகளை தூக்கி எறியுங்கள். சம உரிமை கொடுத்து குழந்தையின் விருப்பத்திற்கேற்ப படிக்க விடுங்கள், விளையாட விடுங்கள்.
உடலுக்கு நீங்களே பொஸ்:
குழந்தைகளிடம், உங்களின் உடலுக்கு நீங்கள்தான் பொஸ். நீங்களே முதலாளி. உங்கள் உடல் உங்களுக்கு மட்டும்தான் பணிய வேண்டும். மற்றவரின் விருப்பத்திற்கு உங்களின் உடல் பணியக் கூடாது. தேவையில்லாமல் உங்கள் உடலை தொட யாருக்கும் உரிமையில்லை என்ற புரிதலை குழந்தைகள் மனதில் அழுத்தமாக ஏற்படுத்துங்கள்.
உங்கள் குழந்தை இனி பத்திரமாக இருப்பாள்/ன், நீங்கள் ஒரு பொறுப்பான பெற்றோராக இருந்தால்….!

image

நன்றி:Jamialim.NEWs

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s