ஏன் இழப்பு உங்களுக்கு..

image

1) இழப்புக்குள்ளாக்கப் படும் அருட் செல்வங்கள்: –
“மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட் செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகி விடுகின்றனர். 1. ஆரோக்கியம். 2. ஓய்வு” என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார். (ஆதாரம் : புகாரி)
2) உலகத்தையும் அதிலிருப்பவற்றையும் விடச் சிறந்தது: –
‘சொர்க்கத்தில் ஒரு சாட்டை வைக்கும் அளவு இடம் (கிடைப்பது), உலகத்தையும் அதிலிருப்பவற்றையும் விடச் சிறந்ததாகும். காலையில் சிறிது நேரம் அல்லது மாலையில் சிறிது நேரம் இறைவழியில் செல்வது உலகத்தையும் அதிலிருப்பவற்றையும் விடச் சிறந்ததாகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன். அறிவிப்பவர் : ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி), ஆதாரம் : புகாரி
3) வழிப்போக்கனைப் போல இவ்வுலகில் வாழ வேண்டும்: –
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார்: இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என் தோளைப் பிடித்துக் கொண்டு ‘உலகத்தில் நீ அந்நியனைப் போன்று, அல்லது வழிப் போக்கனைப் போன்று இரு’ என்றார்கள்.
அறிவிப்பாளர்களில் ஒருவரான முஜாஹித்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘நீ மாலை நேரத்தை அடைந்தால் காலைவேளையை எதிர்பார்க்காதே! நீ காலை வேளையை அடைந்தால் மாலை நேரத்தை எதிர்பார்க்காதே! நீ நோய்வாய்ப்படும் நாளுக்காக உன்னுடைய ஆரோக்கியத்தில் சிறி(து நேரத்)தைச் செலவிடு. உன்னுடைய இறப்பு(க் குப் பிந்திய நாளு)க்காக உன்னுடைய வாழ்நாளில் சிறி(து நேரத்)தைச் செலவிடு’ என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுவார்கள். (ஆதாரம் : புகாரி)
4) முதியவரின் இளமை: –
“முதியவரின் மனம் கூட இரண்டு விஷயங்களில் இளமையாகவே இருந்துவரும். 1. இம்மை வாழ்வின் (-செல்வத்தின்) மீதுள்ள பிரியம். 2. நீண்டநாள் வாழவேண்டும் என்ற ஆசை” என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி
5) மனிதர்களோடு வளரும் ஆசைகள்: –
“மனிதன் (வளர்ந்து) பெரியவனாக ஆக அவனுடன் இரண்டு ஆசைகளும் வளர்கின்றன: 1. பொருளாசை. 2. நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற ஆசை” என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி), ஆதாரம் : புகாரி
6) நரகம் தடை செய்யப்படக் காரணமான வார்த்தை: –
இத்பான் இப்னு மாலிக் அல்அன்சாரி (ரலி) அவர்கள் (பின்வருமாறு) சொல்ல கேட்டேன். “(ஒருநாள்) அதிகாலையில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்திருந்தபோது ‘அல்லாஹ்வின் திருப்தியை நாடி ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ (வணக்கத்திற்குரியவர் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை) என்று கூறியவாறு மறுமை நாளில் ஓர் அடியார் வந்தால் அவரின் மீது நரகத்தை அல்லாஹ் தடை செய்யாமல் இருப்பதில்லை”‘ என்று கூறினார்கள். அறிவிப்பவர்: முஹ்மூத் இப்னு ரபீஉ (ரலி), ஆதாரம் : புகாரி
7) பொறுமைக்குப் பிரதிபலன் சொர்க்கம்: –
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ் கூறினான்:
இறைநம்பிக்கையுள்ள என் அடியார், அவருக்குப் பிரியமான ஒருவரின் உயிரை நான் கைப்பற்றிவிடும்போது நன்மையை நாடிப் பொறுமை காத்தால், சொர்க்கமே அவருக்கு நான் வழங்கும் பிரதிபலனாக இருக்கும்”. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி
8) மறுமையை மறக்கடிக்கும் உலகத்தின் செல்வம்: –
‘அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு வறுமை ஏற்பட்டுவிடும் என்று நான் அஞ்சவில்லை. ஆயினும், உங்களுக்கு முன்னிருந்தவர்களுக்கு உலகச் செல்வம் தாராளமாகக் கொடுக்கப்பட்டதைப் போன்று உங்களுக்கும் தாராளமாகக் கொடுக்கப்பட்டு, அதற்காக அவர்கள் ஒருவருக்கொருவர் போட்டியிட்டதைப் போன்று நீங்களும் போட்டியிட, அது (மறுமையின் எண்ணத்திலிருந்து) அவர்களின் கவனத்தைத் திருப்பிவிட்டதைப் போன்று உங்களின் கவனத்தையும் அ(ந்த உலகாசையான)து திருப்பிவிடுமோ என்றே நான் அஞ்சுகிறேன்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: மிஸ்வர் இப்னு மக்ரமா (ரலி), ஆதாரம் : புகாரி
9) செல்வத்துக்கு அடிமையானவன் துர்பாக்கியவான் ஆவான்: –
“பொற்காசு, வெள்ளிக்காசு, குஞ்சம் உள்ள (ஆடம்பர) ஆடை, சதுரக் கம்பளி ஆடை ஆகியவற்றுக்கு அடிமையாகிவிட்டவன் துர்பாக்கியவான் ஆவான். அவனுக்கு (செல்வம்) வழங்கப்பட்டால் திருப்தியடைவான். (செல்வம்) வழங்கப்படாவிட்டால் அதிருப்தியடைவான்” என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி
“ஆதமின் மகனக்கு (மனிதனுக்கு) இரண்டு நீரோடைகள் (நிறைய) செல்வம் இருந்தாலும் மூன்றாவதையும் அவன் தேடுவான். ஆதமின் மகனுடைய வயிற்றை மண்ணை (மரணத்தை)த் தவிர வேறெதுவும் நிரப்பாது. (பாவங்களிலிருந்து) பாவமன்னிப்புக் கோரி மீண்டுவிட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான்” என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), ஆதாரம் : புகாரி
10) நம்முடைய செல்வம் எது?
“(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் ‘உங்களில் யாருக்காவது தம் செல்வத்தை விடத் தம் வாரிசுகளின் செல்வம் விருப்பமானதாக இருக்குமா?’ என்று கேட்டார்கள். தோழர்கள் ‘இறைத்தூதர் அவர்களே! எங்கள் அனைவருக்குமே (வாரிசுகளின் செல்வத்தை விட) எங்களின் செல்வமே விருப்பமானதாகும்’ என்று பதிலளித்தார்கள். ‘அவ்வாறாயின், ஒருவர் (இறப்பதற்கு முன் அறவழியில்) செலவிட்டதே அவரின் செல்வமாகும். (இறக்கும் போது) விட்டுச் செல்வது அவரின் வாரிசுகளின் செல்வமாகும்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி), ஆதாரம் : புகாரி
11) மறுமையில் நற்பலன் குன்றியவர்கள்: –
‘(இம்மையில் செல்வம்) அதிகம் உள்ளவர்களே மறுமை நாளில் (நற்பலன்) குறைந்தவர்கள் ஆவர்; ஒரு சிலரைத் தவிர, அவர்களுக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்கினான். அதை அவர்கள் தம் வலப் பக்கமும் இடப் பக்கமும் தம் முன் பக்கமும் பின் பக்கமும் வாரி வழங்கி அச்செல்வத்தால் நன்மை புரிகிறார்கள். (இவர்களைத் தவிர)’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூதர் (ரலி), ஆதாரம் : புகாரி (நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி).
12) போதுமென்ற மனமே உண்மையான செல்வமாகும்: –
“(வாழ்க்கை) வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று; மாறாகப் போதுமென்ற மனமே (உண்மையான) செல்வமாகும்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி
தொடர்ந்து செய்யப்படும் நற்செயலே அல்லாஹ்வுக்கு விருப்பமானது!
‘நற்செயல்களில் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமானது எது?’ என்று நபி(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அவர்கள் ‘(எண்ணிக்கையில்) குறைவாக இருந்தாலும், (தொடர்ந்து செய்யப்படும்) நிலையான நற்செயலே’ என்று விடையளித்தார்கள். மேலும், ‘நற்செயல்கள் புரிவதில் இயன்றவரை அதன் எல்லையைத் தொடமுயலுங்கள்’ என்றும் கூறினார்கள். . அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), ஆதாரம் : புகாரி
13) நன்றியுள்ள அடியாரின் செயல்: –
நபி(ஸல்) அவர்கள் தம் பாதங்கள் வீங்கும் அளவுக்கு அல்லது புடைக்கும் அளவுக்கு நின்று தொழுவார்கள். இது பற்றி அவர்களிடம் கேட்கப்படும்போது ‘நான் நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா?’ என்று கேட்பார்கள். அறிவிப்பவர்: முஃகீரா இப்னு ஷ{அபா(ரலி), ஆதாரம் : புகாரி
14) விசாலமான அருட்கொடை எது?
அன்சாரிகளில் சிலர் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் (பசிக்கு உணவும் செலவுக்குப் பணமும்) கேட்டார்கள். அவ்வாறு கேட்ட யாருக்குமே நபி(ஸல்) அவர்கள் கொடுக்காமல் இருக்கவில்லை. இறுதியாக, நபியவர்களிடம் இருந்த அனைத்தும் தீர்ந்துவிட்டது. தம் கரங்களால் செலவிட்டு எல்லாப் பொருட்களும் தீர்ந்து போன பின்பு அந்த அன்சாரிகளிடம் நபி(ஸல்)
அவர்கள் ‘என்னிடம் உள்ள எச்செல்வத்தையும் உங்களுக்கு வழங்காமல் நான் சேமித்து வைக்கப் போவதில்லை. (இருப்பினும்) சுயமரியாதையோடு நடப்பவரை அல்லாஹ் சுயமரியாதையுடன் வாழச் செய்வான். (இன்னல்களைச்) சம்ப்பவருக்கு அல்லாஹ் மேலும் சம்ப்புத் தன்மையை வழங்குவான். பிறரிடம் தேவையாகாமல் (தன்னிறைவுடன்) இருப்பவரை அல்லாஹ் தன்னிறைவு உள்ளவராக ஆக்குவான். பொறுமையைக் காட்டிலும் மேலான விசாலமானதோர் அருட்கொடை (வேறெதும்) உங்களுக்கு வழங்கப்படவில்லை’ என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி), ஆதாரம் : புகாரி
15) விசாரணை ஏதுமின்றி சொர்க்கம் செல்பவர்கள்!
“என் சமுதாயத்தாரில் எழுபதாயிரம் பேர் விசாரணை ஏதுமின்றி சொர்க்கம் செல்வார்கள். அவர்கள் யாரெனில், ஓதிப்பார்க்க மாட்டார்கள். பறவை சகுனம் பார்க்கமாட்டார்கள். தம் இறைவ(ன் மீது முழு நம்பிக்கை கொண்டு அவ)னையே சார்ந்திருப்பார்கள்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : புகாரி
16) சொர்க்கத்திற்கு உத்திரவாதம் அளிக்கப்பட்டவர்கள்!
“தம் இரண்டு தாடைகளுக்கு இடையே உள்ளத(hன நாவி)ற்கும், தம் இரண்டு கால்களுக்கு இடையே உள்ளத(hன மர்ம உறுப்பி)ற்கும் என்னிடம் உத்தரவாதம் அளிப்பவருககு நான் சொர்க்கத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறேன்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி) , ஆதாரம் : புகாரி
17) அண்டை வீட்டாருக்கு தொல்லை தராதே!
“அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும்; அல்லது வாய் மூடி இருக்கட்டும் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தர வேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்:அபூஹ¤ரைரா (ரலி) , ஆதாரம் : புகாரி
18) விருந்தினரைக் கண்ணியப்படுத்துங்கள்!
நபி(ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறியதை என் காதுகள் செவியேற்றன்; என் உள்ளம் அதை மனனமிட்டது. விருந்துபசாரம் மூன்று நாள்களாகும். (அவற்றில்) ‘அவரின் கொடையும் அடங்கும் அப்போது அவரின் கொடை என்ன?’ என்று கேட்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், ‘(அவரின் கொடை) ஒரு பகல் ஓர் இரவு (உபசரிப்பு) ஆகும்’ என்று கூறிவிட்டு, ‘அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தினரைக் கண்ணியப்படுத்தட்டும். மேலும், அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும்; அல்லது வாய்மூடி இருக்கட்டும்’ என்றார்கள். அறிவிப்பவர்:அபூ ஷ{ரைஹ் அல்அதவீ அல்குஸாஈ(ரலி), ஆதாரம் : புகாரி
19) பின்விளைவைப் பற்றி யோசிக்காமல் பேசினால்?
“ஓர் அடியார் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல் ஒன்றைப் பேசிவிடுகிறார். அதன் காரணமாக அவர் (இரு) கிழக்குத் திசைகளுக்கிடையே உள்ள தொலைவைவிட அதிகமான தூரத்தில் நரகத்தில் விழுகிறார்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்:அபூஹ¤ரைரா (ரலி), ஆதாரம் : புகாரி
“ஓர் அடியார் அல்லாஹ்வின் திருப்திக்குரிய ஒரு வார்த்தையை சர்வசாதாரணமாக (அதன் பலனைப் பற்றிப் பெரிதாக யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அல்லாஹ் அவரின் அந்தஸ்துகளை உயர்த்திவிடுகிறான். ஓர் அடியார் அல்லாஹ்வின் கோபத்துக்குரிய ஒரு வார்த்தையை சர்வசாதாரணமாக (அதன் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அவர் நரகத்தில் போய் விழுகிறார்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹ¤ரைரா (ரலி), ஆதாரம் : புகாரி
20) மறுமையில் அல்லாஹ்வின் அர்ஷின் நிழல் யாருக்கு கிடைக்கும்?
“(தன்னுடைய நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத மறுமை நாளில்) ஏழு போருக்கு அல்லாஹ் தன்னுடைய (அரியாசத்தின்) நிழலில் அடைக்கலம் அளிக்கிறான். (தனிமையில்) அல்லாஹ்வை நினைவு கூர்ந்து (அவனுடைய அச்சத்தால்) கண்ணீர் வடிப்பவர் (அவர்களில் ஒருவராவார்.). என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹ¤ரைரா (ரலி), ஆதாரம் : புகாரி
21) இறையச்சத்தால் குறைவாக சிரி! நிறைய அழு!
“நான் அறிவதை நீங்கள் அறிவீர்களாயின் நிச்சயம் குறைவாகச் சிரிப்பீர்கள். அதிகமாக அழுவீர்கள்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹ¤ரைரா (ரலி), ஆதாரம் : புகாரி
22) சொர்க்கம், நரகம்!
“மன இச்சைகளால் நரகம் மூடப்பட்டுள்ளது. சிரமங்களால் சொர்க்கம் மூடப்பட்டுள்ளது” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அறிவிப்பவர்: அபூஹ¤ரைரா (ரலி), ஆதாரம் : புகாரி
23) செல்வத்தில் கீழானவர்களை நினைத்துப்பார்: –
“செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் கண்டால், உடனே (அவற்றில்) தம்மைவிடக் கீழனாவர்களை அவர் (நினைத்துப்) பார்க்கட்டும்”என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹ¤ரைரா (ரலி), ஆதாரம் : புகாரி
24) நன்மையான காரியத்தை செய்ய நினைத்தாலே நன்மை எழுதப்படுகின்றது: –
“(ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள் தம் இறைவனைப் பற்றி அறிவிக்கையில் (பின்வருமாறு) கூறினார்கள்: அல்லாஹ் நன்மைகளையும் தீமைகளையும் (அவை இன்னின்னவை என நிர்ணயித்து) எழுதிவிட்டான். பிறகு அதனை விவரித்தான். அதாவது ஒருவர் ஒரு நன்மை செய்யவேண்டும் என (மனத்தில்) எண்ணிவிட்டாலே அதைச் செயல்படுத்தாவிட்டாலும் அவருக்காகத் தன்னிடம் அதை ஒரு முழு நன்மையாக அல்லாஹ் பதிவு செய்கிறான். அதை அவர் எண்ணியதுடன் செயல்படுத்தியும்விட்டால், அந்த ஒரு நன்மையைத் தன்னிடம் பத்து நன்மைகளாக, எழு நூறு மடங்காக, இன்னும் அதிகமாக அல்லாஹ் பதிவு செய்கிறான். ஆனால் ஒருவர் ஒரு தீமை செய்ய எண்ணி, (அல்லாஹ்வுக்கு அஞ்சி) அதைச் செய்யாமல் கைவிட்டால், அதற்காக அவருக்குத் தன்னிடம் ஒரு முழு நன்மையை அல்லாஹ் எழுதுகிறான். எண்ணியபடி அந்தத் தீமையை அவர் செய்து முடித்துவிட்டாலோ, அதற்காக ஒரேயொரு குற்றத்தையே அல்லாஹ் எழுதுகிறான்” அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), ஆதாரம் : புகாரி
25) சொர்க்க வாசியா அல்லது நரகவாசியா என தீர்மானிப்பது எது?
“(கைபர் போரின் போது) நபி(ஸல்) அவர்கள் (யூத) இணைவைப்பாளர்களிடம் போரிட்டுக் கொண்டிருந்த (குஸ்மான் என்றழைக்கப்பட்ட) ஒரு மனிதரைப் பார்த்தார்கள். அவர் எதிரிகளுக்கு பதிலடி கொடுப்பதில் முஸ்லிம்களிலேயே மகத்தான (பங்காற்றுப)வராக இருந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘நரகவாசிகளில் ஒருவரைப் பார்க்க விரும்புகிறவர் இவரைப் பார்த்துக் கொள்ளலாம்’) என்று (குஸ்மான் எனும் அந்த மனிதரைக் குறித்துக்) கூறினார்கள். (அவரைப் பற்றி நபியவர்கள் ஏன் அவ்வாறு கூறினார்கள் என்று அறிந்து கொள்வதற்காக) உடனே அவரை இன்னொரு மனிதர் பின்தொடர்ந்தார். (குஸ்மான் என்ற) அந்த மனிதரோ (எதிரிகளுடன் கடுமையாகப்) போராடிக் கொண்டு இருந்தார். இறுதியில் அந்த மனிதர் (எதிரிகளால் கடுமையாகக்) காயப்படுத்தப்பட்டார். அதனால் அவர் அவசரமாக இறந்துவிட விரும்பி, தன்னுடைய வாளின் (கீழ்ப் பகுதியைப் பூமியில் நட்டு வைத்து, (கீழ்ப் பகுதியைப் பூமியில் நட்டு வைத்து, அதன்) கூரான பகுதியைத் தம் மார்புகளுக்கிடையே வைத்து, அந்த வாளின் மீது உடலை அழுத்திக் கொண்டு தற்கொலை செய்து) கொண்டார். வாள் அவரின் தோள்களுக்கிடையே இருந்து வெளியேறியது.
அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘ஓர் அடியார் மக்களின் பார்வையில் சொர்க்கவாசிகளின் நற்செயலைச் செய்து வருவார். ஆனால், (உண்மையில்) அவர் நரகவாசிகளில் ஒருவராக இருப்பார். (இதைப் போன்றே) ஓர் அடியார் மக்களின் பார்வையில் நரகவாசிகளின் (தீய) செயலைச் செய்துவருவார். (உண்மையில்) அவர் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார். இறுதி முடிவுகளைக் கொண்டே செயல்கள் தீர்மானிக்கப்படுகின்றன’ என்றார்கள்” அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ்ஸாஇதீ (ரலி), ஆதாரம் : புகாரி
26) அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான செயல்: –
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களின் இல்லத்தைச் சுட்டிக் காட்டியவாறு அபூ அம்ர் அஷ்ஷைபானீ (ரஹ்), ‘(இதோ!) இந்த வீட்டுக்காரர் (பின்வருமாறு) எனக்குத் தெரிவித்தார்கள்’ என்று கூறினார்கள்: நான் நபி (ஸல்) அவர்களிடம் ‘கண்ணியமும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான செயல் (அமல்) எது?’ என்று கேட்டேன். அவர்கள் தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவது’ என்றார்கள். ‘பிறகு எது?’ என்று கேட்டேன். ‘தாய் தந்தையருக்கு நன்மை செய்வது’ என்றார்கள். (நான் தொடர்ந்து) ‘பிறகு எது?’ என்றேன். அவர்கள், ‘இறைவழியில் அறப்போரிடுதல்’ என்று பதிலளித்தார்கள். இவற்றை (மட்டுமே) என்னிடம் நபி (ஸல்) அவர்கள் தெரிவித்தார்கள். இன்னும் அதிகமாக (இது குறித்து) நான் அவர்களிடம் கேட்டிருந்தால் எனக்கு இன்னும் நிறைய பதிலளித்திருப்பார்கள். அறிவிப்பவர் :வலீத் இப்னு அய்ஸார் (ரஹ்), ஆதாரம் : புகாரி.
27) தாயின் மகிமை: –
இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார்?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘உன் தாய்’ என்றார்கள். அவர், ‘பிறகு யார்?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘உன் தாய்’ என்றார்கள். அவர், ‘பிறகு யார்?’ என்றார். ‘உன் தாய்’ என்றார்கள். அவர், ‘பிறகு யார்?’ என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘பிறகு, உன் தந்தை’ என்றார்கள். அறிவிப்பவர் :அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி.
28) தம் தாய் தந்தையர் ஏசப்பட தாமே காரணம்?
‘ஒருவர் தம் தாய் தந்தையரை சபிப்பது பெரும் பாவங்களில் உள்ளதாகும்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ‘இறைத்தூதர் அவர்களே! ஒருவர் தம் தாய் தந்தையரை எவ்வாறு சபிப்பார்?’ என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், ‘ஒருவர் இன்னொருவரின் தந்தையை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தந்தையையும் தாயையும் ஏசுவார் (ஆக, தம் தாய் தந்தையர் ஏசப்பட இவரே காரணமாகிறார்)’ என்றார்கள். அறிவிப்பவர் :அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) , ஆதாரம் : புகாரி.
29) அல்லாஹ் தடை செய்ததும் வெறுப்பதும்!
“அன்னையரைப் புண்படுத்தவது, (அடுத்தவருக்குத் தரவேண்டியதைத்) தர மறுப்பது, (அடுத்தவருக்கு உரியதைத்) தருமாறு கேட்பது, பெண் சிசுக்களை உயிருடன் புதைப்பது ஆகியவற்றை அல்லாஹ் தடை செய்துள்ளான். மேலும், (தேவையின்றி) அதிகமாகப் பேசுவது, அதிகமாகக் (கேள்வி, அல்லது யாசகம்) கேட்பது, செல்வத்தை வீணாக்குவது ஆகியவற்றை அல்லாஹ் வெறுத்துள்ளான்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :முஃகீரா இப்னு ஷுஅபா (ரலி), ஆதாரம் : புகாரி.
30) பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்கள்: –
(ஒருமுறை) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?’ என்று மூன்று முறை கேட்டார்கள். நாங்கள், ‘ஆம், இறைத்தூதர் அவர்களே! (அறிவியுங்கள்)’ என்று கூறினோம். நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வுக்கு இணை வைப்பதும், பெற்றோரைப் புண்படுத்துவதும்’ என்று சொல்லிவிட்டு சாய்ந்து கொண்டிருந்த அவர்கள் எழுந்து அமர்ந்து, ‘அறிந்து கொள்ளுங்கள்: பொய் பேசுவதும் பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்தான்); பொய் பேசுவதும் பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்தான்)’ என்று கூறினார்கள். இதை அவர்கள் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள். (இதைக் கண்ட) நான் ‘அவர்கள் நிறுத்திக்கொள்ளக் கூடாதா?’ என்றேன். அறிவிப்பவர் :அபூ பக்ரா நுஃபைஉ இப்னு ஹாரிஸ் (ரலி), ஆதாரம் : புகாரி.
31) இணைவைக்கும் பெற்றோரையும் ஆதரிக்க வேண்டும்: –
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் என் தாயார் ஆசையாக என்னிடம் வந்தார். (அப்போது அவர் இணைவைப்பவராக இருந்தார்.) நான் நபி (ஸல்) அவர்களிடம் ‘(என் தாயார் வந்துள்ளார்.) அவருடன் உறவைப் பேணிக்கொள்ளட்டுமா?’ என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘ஆம்’ என்று கூறினார்கள். ‘எனவே, அஸ்மாவின் தாயர் தொடர்பாக, ‘மார்க்க (விஷய)த்தில் உங்களிடம் போரிடாமலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அல்லாஹ் தடுக்கவில்லை. நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துவோரை நேசிக்கிறான்’ எனும் (திருக்குர்ஆன் 60:8 வது) வசனத்தை அல்லாஹ் அருளினான்’ என (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் இப்னு உயைனா (ரஹ்) கூறினார். அறிவிப்பவர் :அஸ்மா பின்த் அபீ பக்ர் (ரலி), ஆதாரம் : புகாரி.
32) உறவை முறிப்பவன் சுவனம் புகமாட்டான்: –
“உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :ஜுபைர் இப்னு முத்யிம் (ரலி), ஆதாரம் : புகாரி.
33)வாழ்வாதாரம் பெருக வேண்டுமா? ஆயுள் நீட்டிக்கபபட வேண்டுமா?
“தம் வாழ்வாதாரம் (ரிஸ்க்) விசாலமாக்கப்படுவதும் வாழ்நாள் நீட்டிக்கப்படுவதும் யாருக்கு மகிழ்ச்சி அளிக்குமோ அவர் தம் உறவைப் பேணி வாழட்டும்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி.
34) உறவை முறித்தால்?
உறவு (இறையருளின்) ஒரு கிளையாகும். எனவே, ‘அதனுடன் ஒட்டி வாழ்வோருடன் நானும் உறவு பாராட்டுவேன். அதை முறித்துக் கொள்கிறவரை நானும் முறித்துக் கொள்வேன்’ (என்று உறவைப் படைத்தபோது இறைவன் சொன்னான்). என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :ஆயிஷா (ரலி), ஆதாரம் : புகாரி.
35) அன்பு காட்டாதவர் அன்பு காட்டப்படமாட்டார்: –
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (தம் பேரரான) ஹஸன் இப்னு அலீயை முத்தமிட்டார்கள். அப்போது அவர்கள் அருகில் அமர்ந்துகொண்டிருந்த அக்ரஉ இப்னு ஹாபிஸ் அத்தமீமீ (ரலி), ‘எனக்குப் பத்துக் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரைக் கூட நான் முத்தமிட்டதில்லை’ என்றார். அவரை ஏறெடுத்துப் பார்த்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘அன்பு காட்டாதவர் அன்பு காட்டப்படமாட்டார்’ என்று கூறினார்கள். அறிவிப்பவர் :அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி.
36) அல்லாஹ் அடியார்கள் மீது வைத்துள்ள அன்பு: –
(ஹவாஸின் குலத்தைச் சேர்ந்த) கைதிகள் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களிடையே இருந்த ஒரு பெண்ணின் மார்பில் பால் சுரந்தது. அவள் பாலூட்டுவதற்காக(த் தன் குழந்தையைத் தேடினாள்). குழந்தை கிடைக்கவில்லை. எனவே), கைதிகளில் எந்தக் குழந்தையைக் கண்டாலும், அதை (வாரி) எடுத்து(ப் பாலூட்டினாள். தன் குழந்தை கிடைத்தவுடன் அதை எடுத்து)த் தன் வயிற்றோடு அணைத்துப் பாலூட்டலானாள். அப்போது ‘எங்களிடம் நபி (ஸல்) அவர்கள், ‘இந்தப் பெண் தன் குழந்தையை தீயில் எறிவாளா? சொல்லுங்கள்!’ என்றார்கள். நாங்கள், ‘இல்லை, எந்நிலையிலும் அவளால் எறிய முடியாது’ என்று சொன்னோம். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , ‘இந்தக் குழந்தையின் மீது இவளுக்குள்ள அன்பைவிட அல்லாஹ் தன் அடியார்களின் மீது மிகவும் அன்பு வைத்துள்ளான்’ என்று கூறினார்கள். அறிவிப்பவர் :உமர் இப்னு கத்தாப் (ரலி), ஆதாரம் : புகாரி.

நன்றி:Jamialim.News

Posted from WordPress for Android

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s