இஸ்லாமிய பெண்களே,!!!

¶”இஸ்லாத்தின் பார்வையில் பெண்கள் பள்ளிக்குச் சென்று தொழலாமா?”¶

image

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் பெண்கள் பள்ளியில் தொழுதிருக்கிறார்கள். ஜமாஅத்தின் நன்மை, பள்ளியில் தொழும் நன்மை தங்களுக்கும் கிடைக்க வேண்டும், அமல்கள் அதிகம் செய்ய வேண்டும் என்ற ஆர்வமிகுதியால் பெண்கள் பள்ளிக்கு சென்று தொழுதிருக்கிறார்கள். அதற்கு நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களும் அனுமதித்திருக்கிறார்கள். கட்டுக்கோப்பான, கண்காணிப்பான, ஒழுகக்கம் மிகுந்த காலமான அந்தக் காலத்தில் பெண்கள் பள்ளிக்குச் சென்று தொழுவது ஆகுமாக்கப்பட்டிருந்தது.
ஆனாலும் பிற்காலத்தை அறிந்த ஞானமுடைய நமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெண்கள் பள்ளிக்கு வந்து தொழுவதினால் மிகுந்த குழப்பம் உண்டாகும் என்பதை அறிந்திருந்தார்கள். எனவே அவர்கள் தங்கள் காலத்திலேயே அதை தடுக்க முனைந்துள்ளார்கள். அதற்காகத்தான் பெண்கள் வீட்டில் தொழுவது சிறந்தது என்று அறிவித்தார்கள். ஆர்வமிகுதியால் பள்ளியில் தொழும் பெண்களுக்கு அதற்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்தார்கள்.பெண்கள் வீட்டில் தொழுவதால் பள்ளியில் தொழும் நன்மை கிடைக்கிறது என்று நமது புகஹாக்கள் சட்டம் வகுத்துள்ளனர்.
பெண்கள் பள்ளிக்குச் சென்று தொழுவதை விட வீட்டில் தொழுவதுதான் சிறந்தது என்பற்குரிய நபிமொழிகளைப் பாருங்கள்:
பெண்கள் வீடுகளில் தொழுவதுதான் சிறந்தது என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதற்கான காரணம் என்ன? என்பதை நாம் அனைவரும் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும். பெண்கள் விடயத்தில் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எது சிறந்தது என்று சொன்னார்களோ அதைத் தான் அவர்களின் உம்மத்துக்களாகிய நாம் செய்ய வேண்டும் அந்த அடிப்படையில்தான் பெண்கள் வீட்டில் தொழுவதுதான் சிறந்தது என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதால்தான் நபிகளாரின் மனைவிமார்கள் குறிப்பாக ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் மற்றும் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் மகள் பாத்திமா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கூட பள்ளியில் தொழவில்லை, பள்ளிவாசலில் தொழுதார்கள் என்பதற்கு ஒரு ஆதாரமும் கிடையாது. அவர்கள் அனைவர்களும் வீட்டில்தான் தொழுதார்கள். அதுதான் சிறந்தது என்பதை கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவித்துள்ளார்கள். பள்ளிவாசலில் தொழுவதுதான் சிறந்தது என்று இருந்திருந்தால் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் மனைவிமார்கள், அன்னை ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் பள்ளிவாசலில் தொழுதிருப்பார்கள் ஆனால் அவர்கள் யாரும் தொழவில்லை. வீடுகளில் தான் தொழுதுள்ளார்கள்.
இறைத்தூதர்(ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: ”நீண்ட நேரம் தொழுகை நடத்தும் எண்ணத்துடன் நான் தொழுகையைத் துவக்குகிறேன். அப்போது குழந்தையின் அழுகுரலை கேட்கிறேன். (எனக்குப் பின்னால் தொழுது கொண்டிருக்கும்) அந்தக் குழந்தையின் தாயாருக்குச் சிரமமளிக்கக் கூடாது என்பதனால் தொழுகையைச் சுருக்கமாக முடித்து விடுகிறேன்“. என அபூ கதாதா(ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ) அறிவித்தார்கள்.
(ஷஹீஹ் புகாரி 707)
இந்த ஹதீஸ் கூட பெண்கள் வீடுகளில் தொழுவதுதான் சிறந்தது என்பதை அறிவிக்கின்றது, ஏனெனில் சில பெண்கள் பள்ளிக்கு வரும் போது அவர்களின் குழந்தைகளையும் கூட அழைத்து வருவார்கள். சில நேரம் அந்த குழந்தைகள் பள்ளிவாசலில் சிறுநீர் கழித்து நஜீஸ் படுத்திவிடுவார்கள். அல்லது அழுது அங்கே தொழக்கூடிய ஆண்கள் பெண்கள் உட்பட அனைவர்களின் கவனங்களையும் திசைதிருப்பி தொழுகையை பாலாக்கிவிடுவார்கள். அந்த அடிப்படையில்தான் மேலே கூறப்பட்ட ஹதீஸில் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையை சுருக்கமாக முடித்து விட்டார்கள்.
உம்மு ஹுமைத் (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே நான் உங்களுடன் (ஜமாஅத்தில்) சேர்ந்து தொழ விரும்புகிறேன் என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நீ என்னுடன் சேர்ந்து தொழுவதை விரும்புகிறாய் என்பது எனக்குத் தெரியும். நீ உன் வீட்டில் தொழுவதை விட வீட்டின் உள் அறையில் தொழுவது உனக்குச் சிறந்ததாகும். நீ உன் சமுதாயத்தின் பள்ளிவாசலில் தொழுவதை விட உன் வீட்டில் தொழுவது சிறந்ததாகும். நீ என்னுடைய பள்ளியில் தொழுவதை விட உன் சமுதாயத்தாரின் பள்ளியில் நீ தொழுவது உனக்குச் சிறந்ததாகும்.(நூல் : அஹ்மது 25842)
இந்தச் செய்தியில் ஸஹாபியத் பெண்மணி உம்மு ஹுமைத் (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் பள்ளிக்கு தொழவரலாமா? என்று கேட்க்கும்போதே விளங்குகின்றது.
நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்திலும் பெண்கள் பள்ளிக்கு சென்று தொழவில்லை என்பது ஆனால் ஆரம்ப காலத்தில் பெண்கள் பள்ளிக்குச் சென்று தொழுவதற்க்கு நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அனுமதி வழங்கியுள்ளார்கள். பிறகு அனுமதி வழங்கவில்லை. அந்த அடிப்படையில்தான் பெண்கள் பள்ளிக்கு தொழவருவதை விட வீட்டில் தொழுவதுதான் சிறந்தது என்பதை நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் உம்மு ஹுமைத் (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களுக்கு கூறுகிறார்கள். எனவே நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் எது சிறந்தது என்று கூறுகிறார்களோ அதுதான் நமக்கு சிறந்தது என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.
சுருக்கமாக கூறுகின்றேன் “நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் மறைவின் பிறகு சில பெண்கள் ஜூம்ஆ தொழுகைக்காக பள்ளிக்கு போக முயற்சி செய்தார்கள். அந்த சமயம் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சிறிய சிறிய பொடிக்கற்களை எடுத்து (பள்ளிக்கு வரவேண்டாம் என்று எதிர்ப்பைக்காட்ட) அவர்களுக்கு எரிந்தவர்களாக உங்கள் வீடுகளில் ளுஹரை தொழுவுங்கள் என்று விரட்டினார்கள்”.
(ஆதாரம் : இப்னு அபீ ஷைபா)
‘பெண்கள் பள்ளிக்கு வருவதைத் தடை செய்யாதீர்கள். அவர்களது வீடுகளில் தொழுவது அவர்களுக்குச் சிறந்தது’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலியல்லாஹு அன்ஹு)
(நூல்: அபூதாவூத் 480, புகாரி, முஸ்லிம்)
இந் நபிமொழி பெண்கள் பள்ளிக்கு வருவதை தடை செய்யாதீர்கள் என்றுதான் இருக்கிறது. ஆனால் பெண்கள் தொழுவது என்று வரும் போது வீடுகளில் தொழுவதையே சிறந்ததாக- நன்மை மிகுந்ததாக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். அதேபோல் ஜும்ஆ தொழுகை கூட பெண்களுக்கு தடுக்கப்பட்டுள்ளது என்பது கீழ்காணும் ஹதீது விளக்குகிறது.’அடிமைகள், பெண்கள், சிறுவர், நோயாளிகள் தவிர மற்ற முஸ்லிம்கள் அனைவர் மீதும் ஜும்ஆ கட்டாயக் கடமையாகும்’ என்பது நபிமொழி(அறிவிப்பவர்: தாரிக் இப்னு ஷிஹாப் (ரலியல்லாஹு அன்ஹு நூல்: அபூதாவூத்)
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் (ஒருநாள்) இஷாவைத் தாமதப்படுத்தினார்கள். பெண்களும் ,சிறுவர்களும் உறங்கிவிட்டனர் என உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறியதும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் புறப்பட்டு வந்தார்கள். ‘இப்பூமியில் வசிப்பவர்கள் உங்களைத் தவிர வேறெவரும் இத்தொழுகையை எதிர் பார்த்திருக்கவில்லை’ என்றார்கள். அந்த நாட்களில் மதீனாவைத் தவிர வேறெங்கும் தொழுகை நடத்தப்படவில்லை. இஷாவை அடிவானத்தின் செம்மை மறைந்ததிலிருந்து இரவின் மூன்றில் ஒரு பகுதி கழிவது வரை மக்கள் தொழுது வந்தனர்.அறிவிப்பவர்: ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா)
(நூல்: புகாரி 864, 866, 569, 862)
இந்த ஹதீது பெண்கள் பள்ளிக்கு வருவதை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விரும்பவில்லை என்பதையும், அதற்காகவே தொழுகையைக் கூட நேரம் தாழ்த்தி தொழுதனர் என்பதும் தெரியவருகிறது.
மக்கா மதீனாவில் ஹஜ் உம்ரா செல்லும் போது பெண்கள் பள்ளிவாசலுக்குச் சென்று தொழுகிறார்களே எனவே பெண்கள் பள்ளிக்குச் சென்று தொழுவதும் சிறந்தது என்று சிலர் கூறுவார்கள். இதனை நாம் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும். மக்கா பள்ளியில் தொழுவதற்கன தனிச் சிறப்பு உள்ளன. ஏனைய இடங்களில் தொழுவதை விட மக்கா பள்ளியில் தொழுவதற்க்கு அதிகம் நன்மையுள்ளது. அந்த அடிப்படையில் ஆயிஷா ரலியல்லாஹுஅன்ஹா அவர்கள் மதீனா – மஸ்ஜித் நபவியில் தொழுதார்கள் என்பதற்கு ஒரு ஆதாரமும் கிடையாது. ஆனால் ஹஜ் செய்த போது மக்கா பள்ளிவாசலில் தொழுதுதான் இருப்பார்கள் அது அங்கே உள்ள சூழல், நிர்பந்தத்தின் அடிப்படையில்தான் பள்ளிவாசலில் தொழுகிறார்கள். எனவே எது சிறந்தது என்று வரும்போது வீடுதான் என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும்.
பெண்கள் பள்ளிக்கு வருவதைப் பற்றி அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் மிகுந்த கவலையுடன் அறிவிக்கும் அறிவிப்பு ஸஹீஹ் முஸ்லிம் கிரந்தத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெண்கள் உருவாக்கிக் கொண்ட(புதிய)வைகளை நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அவதானித்திருந்தால் பனூ இஸ்ரவேலரின் பெண்கள் தடுக்கப்பட்டது போல நமது பெண்களையும் பள்ளிக்கு வராது நிச்சயம் தடுத்திருப்பார்கள்; என அன்னை ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இதுதான் தற்போதைய பெண்களின் நிலை. இதையே நமது சட்ட மேதைகள் சட்டமாக்கி பெண்கள் பள்ளிக்கு வந்து தொழுவதை தடை செய்திருக்கிறார்கள். எனவே பெண்கள் பள்ளிக்கு சென்று தொழுவதை விட வீட்டில் தொழுவதுதான் சிறந்ததாகும்.

நன்றி:Jamialim.News

Posted from WordPress for Android

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s